×

தமிழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: தமிழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேடு வெளியீடு மற்றும் வலைதள தொடக்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

ஆபரேஷனுக்கு பிறகுள்ள சிறிய அளவிலான பாதிப்புகள், சரியான தூக்கம் இல்லாமல் இருந்ததால் ேசார்வாக காணப்பட்டார். இதுபற்றி சிகிச்சை அளிக்க ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், எங்கு ஆபரேஷன் செய்தார்களோ அங்கு பரிசோதனை செய்வதற்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பரிசோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் என்ன மாதிரியான நோய் பாதிப்பு இருக்கிறது, அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது குறித்து அறிவிக்கப்படும். தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் சுற்றி சுழன்று, ஒரு சிசிடிவி கேமரா திரும்பி இருக்கிறதைகூட பார்த்துவிட்டு நமக்கு அறிவிப்பு கொடுத்தார்கள்.

அதையெல்லாம் சரி செய்துவிட்டோம். 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், 2222 கிராம சுகாதார செவிலியர்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 30க்கும் மேற்பட்ட விதவிதமான வழக்குகள் நடைபெற்று வந்தது. எல்லா வழக்குகளுக்குமான தீர்ப்பு நேற்று மாலை வந்துவிட்டது. துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில், அதாவது ஒரு மாத காலத்திற்குள் பணி நியமனங்கள் முறைப்படுத்தும் பணியை மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நேற்று இரவே தொடங்கி விட்டார்கள்.

ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என ஏறத்தாழ சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வழங்கப்படும். ஏற்கனவே இந்த துறையின் சார்பில் டிஎன்பிஎஸ்சி மூலம் 10,250 இடங்களை முதல்வர் ஒரே நாளில் பணி ஆணைகளை தந்தார். அதில் 956 இடங்கள் மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்தவர்கள். இதுமட்டுமல்லாமல் சித்த மருத்துவர்கள், ஹோமியோபதி போன்ற எல்லா மருத்துவர்களும் முழுமையாக 100 சதவீதம் நிரப்பப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தமிழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Superman ,Chennai ,Minister ,Ma. Superman ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...